அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

என் உயிர் நீதானே!

உன் கண் தீண்டலில்

இதழ் அசைவில்

மூர்ச்சையாகிறேன்…!

சுவாசமாய் என்னுள் வந்தாய்

என் நரம்புகளில் உன் காதல் வாசம்…!

 

உன்னிடம் தொலைவதற்காய்

காத்திருந்த என் இதயம்

சொன்னது…

அனு அனுவாய்.. கொல்லும்

உன் நினைவுகள்

உன்னதமான இம்சை என்று…!

 

என் காத்திருப்பின் வலிகள்

நீர்த் திவலையாய் விழியோரம் சிந்த…

என் முகம் நிமிர்த்தி

உன் மௌன இதழ்களால்…

என் விழி நீர்

நீ துடைத்த வேளை..!

உள்ளம் சொன்னது…

இவள் தான்

உன் உயிர் என்று!

யாரோ நீ யாரோடி?

யாரோ நீ யாரோடி

ஜீவனுக்குள் ஒன்றானவளோ!

உயிர்த்துடிப்பினில் கலந்தவளோ !

நெஞ்சமஞ்சமதில் புகுந்தவளோ!

யாரோ நீ யாரோடி?

 

பனிக்காற்றின் சாரலாய்

மாலைத் தென்றலாய் நீ

கடந்து சென்றதும் உயிரும் உறையுதடி!

என் இதயம் பறிபோனதடி!

பூக்களின் ஸ்பரிசம்

உன் விரல் தொடக் கண்டேன்

மென்மையின் உச்சமடி நீ!

யாரோ நீ யாரோடி?

 

குழம்பிய எனை

நீங்கிச் சென்றாய்!

நீண்ட இரவைத் தந்தாய்!

தனிமைத்தீயில் தவிக்க விட்டாய்!

உயிரின் வலி உணரவைத்தாய்!

உடலும் உயிரும் நீயாகி!

என்னை முழுமையாக்க!

வந்தவள் நீ என்று

புத்திக்கு புரிய வைத்தாய்!

நீங்காத சொல்…

நீங்காத சொல்லானாய் நெஞ்சினில்

சொல்லாய் வடிக்க…

சொல்லை எடுக்க…

சொல்தான் வருமோ?

சொல்லில் உனை பதிக்க…

 

சொல்லின்றி சொல்லாமல்

நீங்காத சொல்லாய்

என் நெஞ்சினில்….

சொல்லாத என் காதல் …

உன் மௌனம்…

கீறாமல் துண்டானது

என்

இதயம்…

உன்

நொடிப்பொழுது

மௌனம்…

அழகிய கவிதை..!

உயிரையும் மெய்யையும் உருக்கி

உயிர்மெய் கலந்து

கவிதைகள் பல படைக்கிறேன்

நித்தமும்

ஆனாலும்

உன் உதடு உதிர்க்கும்

..ம்ம்போல்

அழகாய் இருப்பதில்லை

எதுவும் . . .

வெட்கப்பூக்கள்…

எங்கேயடி வைத்திருக்கிறாய்

உன் வெட்கப்பூக்களை ஒளித்து..?

என் விழி தீண்டும் நேரங்களிலெல்லாம்

மறக்காமல் பூத்துவிடுகின்றதே

உன் வெட்கப்பூக்கள்…

வெட்கப்பூக்களை ரசிக்கவே

மீண்டும் மீண்டும் உனை

தீண்டத்தோணுதடி…

பைத்தியக்கார உலகம்…

மான் விழியால்

மன்மத பாணம்

எய்தாய் அதை

தூரிகையாக்கி

உன் மௌனமொழிகளுக்கு

உயிர் கொடுத்தேன்

வார்த்தைகளாய்…

என்ன ஆச்சர்யம்

என்னையும் கவிஞன்

என்றார்கள்…!

பைத்தியக்கார உலகம்

என்பது இதுதானோ..?

நம் பண்பாடு…

நாகரீகம் எனும்

கோமாளித்தனத்தில் சிக்கி

இரவு நேர கேளிக்கையிலும்

மதுவிலும் மதி இழந்து

சிற்றின்ப தீண்டலில் மூர்ச்சையாகி

நட்சத்திர குளத்தில்

மிதக்கிறது

உயிரற்ற சடலமாய்…!

ஆசிரியர்கள்

கல்விக்கண் தந்த

கருணை தெய்வங்கள்

புத்தக அறிவோடு

உலக அறிவையும்

புகட்டிய புண்ணியவான்கள்

கரடுமுரடான மனங்களையும்

நல் ஓவியமாய் செதுக்கும்

வித்தை தெரிந்த சிற்பிகள்

 

கிண்டல்கள் கேலிகளினால்

உம்மனம் நோகச்செய்த போதும்

பிள்ளைகளாய் எமை மன்னித்து

எமது முன்னேற்றத்தில் மட்டுமே

கவனம் செலுத்திய மாமனிதர்கள்

 

தண்டிப்பதில் தந்தையாய்

அன்பினில் தாயாய்

நல் வழிகாட்டியாய்

எமை நடத்திய ஆசான்களே

காலங்கள் மாறினாலும்

உம்மீது நாங்கள் கொண்ட

மதிப்பும் அன்பும் என்றுமே

மாறாது

 

ஆசிரிய தின வாழ்த்துக்களுடன்,

சகாய டர்சியூஸ் பீ 

கரைந்தது கர்வம்…

மெல்லிய குளிரென காற்று

இதமான நிலவினொளி

முகமலர்ந்து வானம் கண்டேன்

 

அளவான புன்னகையில்

அம்பை வீசீனாள் வானழகி

எனைமயக்கும் அழகி நீயல்ல

உன்னழகை வென்றவள் 

என் இதயம் வென்றவள்

எனதுரைத்து நகைத்தேன் நான்

 

கர்வம் கொண்ட கண்களால்

இல்லை என்றவள் 

சட்டென மறைந்தாள்

 

மின்னலொன்று ஒளிர்ந்திற்று

அறிந்துகொண்டேன்

என்னவளை பிரதியெடுக்க அவளனுப்பியதென

 

கண்ட நொடி கடந்ததும்

இடியென ஒப்பாரியிட்டவள்

கண்ணீர் சிந்தி அழுதாள்

 

அக்கண்ணீர் துளிதனில்

அவள் கர்வம் கரைந்தது . . .


« Previous PageNext Page »