அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for January, 2019

காதல் தேவதை

கனவினில் வளர்பிறையாய் வந்தவள்
விழிவழி மலர்கணை தொடுக்க…
சிந்தையில் காதல் விருந்தொன்று!

பிறைவடம் சூடி பூவையவள்…
சோலையாய் அருகில் வந்தாள்!
பொய்கை வண்டாய் மனம் பறக்க…
தோள்வளை பற்றி கூட்டி வந்தாள்!

ரதியினம் மண்டியிடும் வதனம் இவள்…
மயக்கும் மழலை பேச்சி இவள்…
மன்மத வாகனம் இவள்…
எந்தன் கவிதைகளின் முகவரி இவள்!

காதல் தேவதை
உந்தன் விரல்கள் எழுதும் சுகவரிகள்…
உள்ளத்தில் இன்ப மழை தூவ…
நெஞ்சினில் காதல் நதியின் ஊற்று!

உன் மரகத அதரம் தந்த மதுரசம்…
காதல் போதையில்!
உன்பெயரே இசைத்தபடி…
தள்ளாடுதே என் இதயம்!

காதல் பிணிக்கு மருந்தானாய்…
உந்தன் இதய வாசனை அறிந்தேன்!
காலங்கள் ஓடினாலும்…
உன் நினைவின்றி நகராதே என் நாட்கள்!

காதல் தனிமை

கவிதையில் சொல்லாத காதல்
உன் விழியின் நளினத்தில் நீ சொல்ல!

கொஞ்சம் மைபூசி கொஞ்சி மெய் பேசும்
விழியினை யார் என்று வியந்து நான் கேட்க!

செங்காந்தள் கரங்கள் எனை தீண்ட
மின்காந்தம் உடலோடு பாய மெய்மறந்தேன்!

சங்கீத பேச்சிக்கள் காதோரம் இசைக்க
அங்கத்தில் காதல் அரும்புகள் பூக்க!

செந்தூரம் சிந்தாதேன் சிந்தும்
மதுர இதழ்கள் இணைசேர!

மனதோடு அந்திப்போர் நிகழ
உயிர்பருகி வெற்றி கனி பறித்து சென்றாய்!

உயிரற்ற உடல் இன்றும்
உன்வரவை நோக்கி தனிமையில் துடித்தபடி..!

தனிமையின் பிடியில்

மயக்கும் மாலை
கதவோரம் நீ!
உன் ஜாடை
மோகமாய் தைக்க…
கரங்களில் நீ!

விரதம் விட்ட நம்விரல்கள்
காதல்வீணை மீட்ட!
பசித்திருந்த இதழ்கள்
பசியாற…
தனித்திருந்த தேகம்
இணைசேர…
காதலின் சாரல்
அனலாய் உடலெங்கும்!
காதோரம் உன் சுவாசம்
உள்ளம் சிலிர்க்க…
விழி திறந்தேன்!

தனிமை கட்டில்…
பக்குவமாய் மடித்து
வைத்த உன் உடைகள்…
அறையெங்கும் அலங்கரிக்கும்
உன் கைவண்ணம்!
பார்த்து சிரிக்க…!
விழிகளில் நீர்கசிய…
உணர்ந்தேன்…
தனிமையின் பிடியில் நான்…!

மௌன மொழிகள்

கண்கள் தீண்ட
காதல் ஊற்று!
கவிதையாய் வழிந்தோட
வார்த்தைகள் அணைபோட!
சிக்கிக்கொண்டு தவிக்குதடி
என் காதல்!

ஓரடிக்கோரடி உன்பெயர்
முனுமுனுக்கும் இதயம்!
காரணம் கேட்டால்
காதல் என்று பிதற்றும்!
சிந்தையில் ஆயிரமாயிரம்
எண்ணங்கள் பூக்கும்!
கவிதை வடிக்க எத்தணித்தால்
ஒளவியம் கொண்ட மொழியோ
சொல் தர மறுக்கும்!

என்செய்வேன் அன்பே?
ஆ… முத்தம் ஒன்று
தந்துவிடவா?
நம் உதடுகள் உரசும்
வேளையில்!
என் இதயத்தின்
மௌன மொழிகளை
மொழிபெயர்த்திடு அன்பே!

அழியா நினைவுகள்

நீரோட்டமாய் உந்தன்
நினைவோட்டம்
மனதை சுண்டி இழுக்க!
நெஞ்சமோ
காதல் மரக்கலம் பற்ற
நினைவலையில்
தொடங்கியது பயணம்!

செங்கதிர் குமிளும் அந்தி
நாவாயில் துயிலும் நீ!
மெய்மறந்து நான் இரசிக்க!
குறும்புக்கார தென்றல்
வாடையாய்
உன் முகந்தழுவ!
பிரிந்தது இமைகளா?
இல்லை
மின்காந்த இழைகளா ?
பார்வை தீண்டியதும்
பாயுதடி மின்சாரம் என்னுள்!

விழியோடு விழி கலந்து
விரலோடு விரல் கோர்த்து
இதழோடு இதழ் சேர்த்து
தோள்மீது உனை சாய்த்து
நாவாயில் நாம் கொஞ்ச
அந்த வான்மகளும்
வெட்கப்பட்டே மறைந்தாள்
நம் காதலின் நெருக்கம் கண்டு!

காதலின் சுமைதனில்
விழிகள் பனிக்க
மீண்டு வந்தேன் நிகழ்காலத்துக்கு!
நினைவலைகள் அடங்கினாலும்
யுகங்களே கடந்தாலும்
உந்தன் நினைவுகள் மட்டும்
என்னில் நீங்காதே!

ஆசை

கோதி அழகுபார்த்த
தலையில்
நகைக்கும் நரை முடிகள்!

வரிக்குதிரையாய் ஓடியவன்
முகத்தில்
வாலிபம் வரைந்து சென்ற வரிகள்!

ஓடிஓடி செல்வம் சேர்க்க
காலம்
களவாடி சென்ற இளமை!

முண்டியடித்து முன்னேறிட
முறித்து
சென்ற இதயம்!

எதிர்காலம் வளமாக்க
வாழாவெட்டியாக்கப்பட்ட
வாழ்க்கை!

வீராவேசம் பேசிய நாவும்
திமிறிய உடலும்
சூடான இரத்தமும் சுண்டி போக

மரணத்திடம் மண்டியிடும்
தருணம்
ஆசை ஒன்று அனலாய் அவனில்!

விழிகளில் நீர்ப்பூக்க
வறண்டு கிடக்கும் நினைவுகளை
விலக்கிக் கொண்டே ஓடினான்!

மீண்டும் ஒருமுறையேனும்
வாழ்ந்திட வேண்டும்
அவனுக்காக!