அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for July, 2011

அமைதியைத் தேடி….

வஞ்சத்தால் உள்ளத்தை

உருகுலைத்து

 

சினத்தினால் சிந்தையை

சிதைத்து

 

சுயநலத்தால் இதயத்தை

இருளவைத்து

 

மனிதம் செத்த அறையில்

மனதினை சிறைவைத்து

 

அமைதி வேண்டுமாம்

தேடி

எங்கெங்கோ செல்கிறார்கள்….

 

புத்திகெட்ட மனிதனே..!

மனிதாபிமானம் எனும் சாவி

கொண்டு திறந்துவிடு

மனதினை

 

தூவிடு

நல் எண்ண விதைகளை

சிந்தையில்..

 

உயிர்பெறட்டும்

உன் இதயம்

அன்பினை சுவாசித்தபடி

 

உள்ள அமைதி

உனைத்தேடி வரும்….

வெட்கமே போதும்

அரிதாரம் வேண்டாமடி
உன்னை அழகாக்க
உன் வெட்கம் ஒன்றே போதும்...

உன் விழி துடித்தால்….

துடிக்கும் உன் விழிமச்சங்கண்டு  

கார்மகள் இடியாய் ஒப்பாரியிட!

நெஞ்சங்கலங்கிய முகில்களும் 

மின்னலாய் மிரட்டலிட!

காரிருளும் சூழ்ந்தது வானுலகை

இனியும் தாமதித்தால் ஆபத்து 

பயந்த வருணனும்!

பாய்ந்தோடி வந்தான் புவிமீது 

சாரலாய் உனைக்காக்க…!  

வாழ்ந்து பார்க்கலாம் வா…

வாழ்கை என்ன

அவ்வளவு கடினமானதா.?

மோதித்தான் பார்க்கலாமே..

 

கோழையாய் நடுங்கி

சாவதை விட

வீரனாய் வாழ்ந்திட

வழிதனை செய்வோம்

வா

 

கூடா நட்பை

வேரோடு வெட்டியெறி

உயிர்கொடுக்கும்

உன்னத நட்பை

உள்ளத்தில் நிறுத்து

இறுதிவரை

 

உன் வளர்ச்சி கண்டு

புறம் பேசித்திரியும்

கயவர்களின் கள்ளப்பேச்சினில்

கவனத்தை சிதறவிடாதே

அர்த்தமில்லா பயத்தில்

அலறும் ஓநாய்களின்

ஊளை சப்தங்களவை

விடிந்ததும் காணாமல் போய்விடும்….

 

இரக்கமில்லா மனிதரிடையே

கொட்டிவிடாதே உன் வேதனைகளை

வேடிக்கை என்றபெயரில்

வார்த்தை வேல்தனை எய்திடுவார்

உணர்ச்சியற்ற பிணங்களிடமிருந்து

வேறு எதை நீ எதிர்பார்க்க முடியும்

 

மறந்தும் நிந்தித்து விடாதே

இதுபோன்ற மனிதர்களை

பாவம்

கருணையின் பெருமையினை

உணராதவர்கள்

அன்பின் ஆழத்தை

அறியாதவர்கள்

உன்னால்

அறிந்துவிட்டுப் போகட்டுமே….

 

வாழ்க்கைப் போராட்டத்தில்

அன்பினை கவசமாக்கு

கோபத்தினை குறுவாளாக்கு

பொறுமைதனை கேடயமாக்கு

தன்னம்பிக்கைதனை உந்தன்

போர்வாளாக்கு

வாழ்க்கை உன் வசப்படும்

கொஞ்சம் காதல் பேசுவோமா…

உறக்கத்தின் உரையாடலில்

தைரியாமாய் சொல்கிறேன்

என் காதலை – ஆனால்

உன்னுடன் இருக்கையிலே

தவியாய் தவிக்கிறேன்

சொல்வதற்கு . . .

 

நண்பர்களுக்கு வீராவேசாமாய்

காதல் சொல்ல கற்றுக்கொடுக்கும்

என் நாவும் ஏனோ

உன்னிடம் காதலைச்சொல்ல

வரும்போது மட்டும்

நடுக்கத்தில் நடனமாடுதடி…!

 

ஏதோ பேசனும்ன்னு வரச்சொன்னீங்க

ம்ம்சொல்லுங்க

என என் விழி நீ பார்த்த நொடி

என் இதயத்துள் ஏதோ ரசாயண மாற்றம்..!

 

பேசுவதற்கு

கோடி வார்த்தைகள் இருந்தும்

உதடுகள் ஏனோ அசையவில்லை

ஆணுக்கும் வீரம் உண்டாம்

எந்த மடையன் சொன்னது..?

தமிழில் பேச வெட்கப்படும் தமிழருக்காக….

தமிழரிடம் தமிழ்பேச

தயங்கும் தமிழ்நாட்டு

தமிழனே

 

விழிகளை விடுத்து

ஓவியம் வாங்கி

என்ன செய்யப்போகிறாய்..?

 

சிந்திக்கும் ஆற்றலை விடுத்து

வெறும் பேச்சாற்றலால்

என்ன சாதிக்கப்போகிறாய்..?

 

பெற்ற தாயை பிரிந்தால்

அனாதையாய் திரிவாய் என்பதினை

என்று நீ உணரப்போகிறாய்?

 

பகலவனை இருளில் அடைத்து

விட்டில் வெளிச்சத்தில் வாழ

ஆசைப்படும் தமிழனே..!

 

வரலாறுகள் செறிந்த

இலக்கியங்கள் நிறைந்த

தனித்தன்மை பொருந்திய

படிக்க பழக இனிமையான மொழி

செம் மொழிகளில் மூத்த மொழி

உந்தன் தாய்மொழிதான் என்பதினை

ஒருமுறையேனும் யோசி தமிழா..

 

நேசிக்கத் தொடங்கு

உலகின் முதல் மொழியாம்

உந்தன் தாய் மொழியினை

நட்பின் வலி

தைத்தன முட்கள்

இதயத்தில் ரணங்கள்

கண்ணீர் ரணங்களுக்காய் இல்லை

முட்கள் உன் வார்த்தைகள்

என்பதினால்!

 

காதலின் வலிதான் கொடுரமென்றேன்

உன்னிடம் அன்று..!

பொய் அதைவிட

நட்பின் பிரிவே

உணர்த்திவிட்டாய்

நீ இன்று…!

 

நரம்போடு பிணைந்து

சந்தோசம் தந்தாய்

உன் உயரிய

நட்பினால் அன்று…!

கூரிய சொற்களால்

அறுத்தும் விட்டாய்

நரக வேதனையில்

நான் இன்று…!

 

இருந்தும் வாழ்வேன்

உன் நட்பின்

நினைவுகளில்

நட்பை மறந்தது

நீ மட்டும்தானே…!

விடியட்டும் என் இரவுகள்

என்னில் எனைத் தின்று

விரைவாய் வளரும்

உன் நினைவுகளை

மறக்க வழிதேடுகிறேன்

தினமும்

என் விடியா இரவுகளில்

 

அழுதே வற்றிய

என் விழிகளும்

உன் பெயர் சொல்லியே

ஓய்ந்த என் உதடுகளும்

உன் காதலையே

சுவாசித்த என் இதயமும்

இறுதியாய் காத்திருக்கின்றன

உன் வரவிற்காய்

 

உனக்குள் ஈரமிருந்தால்

ஒருமுறை எனைசந்தித்து

நீ எனை மறந்தது போல்

உனை மறக்க வழிதனை

சொல்லிவிட்டுப்போ . . .

 

விடியட்டும் என் இரவுகள்…  

ஆய்வறையில் இதயம்

உன் விழி அம்பால்

காயப்பட்ட என் இதயம்

இன்று ஆய்வறையில்

அணுக்கருவை விட..!

அதீத சக்தி

வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு…!